Showing posts with label அபூர்வராகங்கள். Show all posts
Showing posts with label அபூர்வராகங்கள். Show all posts

Friday, 26 August 2016

அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன்.-ரஜினி நண்பர்களுக்கு எழுதிய கடிதம்


அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக 
நடித்து வருகிறேன்.-
ரஜினி நண்பர்களுக்கு எழுதிய கடிதம் 







அபூர்வ ராகங்கள்  படத்தில் தான் நடிப்பது பற்றி, பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு ஏற்கனவே ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.


அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன். திரைப்படக் கல்லூரியில் 36 பேர் படித்த போதிலும், டைரக்டர் பாலசந்தரின் பார்வை என் மீது மட்டுமே பட்டது. எனவே, எனக்குக் கதாநாயகன் வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.


இது பற்றி ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது,
அபூர்வராகங்களில் சின்ன வேஷத்தில்தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால், இதற்காகவா 2 வருஷம் படித்துக் கிழித்தாய்! என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். அதனால் நான் தான் கதாநாயகன் என்று சும்மா ரீல் விட்டேன்.


1 வருடம், 1 1/2 வருடம் கழித்துதான் அபூர்வராகங்கள் பெங்களூருக்கு வரும் என்று நினைத்து தைரியமாக அப்படிச் சொன்னேன்.
என்னுடைய  துரதிர்ஷ்டம், படம் 2 மாதத்திலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது. அப்போது நான பெங்களூரில் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே குஷி எனக்கோ தர்மசங்கடம். என்ன செய்வது என்று தெரியவில்லை.


அபூர்வராகங்கள் படம் ரிலீஸ் ஆன அன்று, முதல் காட்சிக்கே என் நண்பர்கள் எல்லோரும் போனார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, எங்கள் பிரண்ட்தான்! என்று கூறி, எல்லோருக்கும் சுவீட் கொடுத்தார்கள்.


அவர்கள் பலூன்களை ஊதி, கையில் வைத்திருந்தார்கள். நான் திரையில் தோன்றியதும், பலூன்களை படார், படார் என்று உடைத்து என்னை வரவேற்கத்தான்! 

படம் ஆரம்பம் ஆச்சு. டைட்டிலில் சிவாஜிராவ் என்ற பேரைத் தேடுறாங்க. அந்தப் பெயர் வரவில்லை. ரஜினிகாந்த் என்ற பெயர் வருது. அது நான்தான் என்று அவர்களுக்குத தெரியவில்லை.

படம் ஓடிக்கிட்டே இருக்கு. திரையில் என்னைக் காணோம். 

இடைவேளையும் வந்துவிட்டது.

நான் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல நழுவிவிட்டேன். படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். 

இருந்தாலும் ‘படம் நல்லா இருக்கு. முழுவதையும் பார்த்துவிட்டு போகலாம்’ என்று உட்கார்ந்திருந்தார்கள். பலூனில் காற்றை இறக்கி விட்டு பக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள்.


இடைவேளை முடிந்து படம் ஆரம்பம் ஆச்சு.
இரண்டு கதவையும் தள்ளிவிட்டு ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி, மீது பழைய கோர்ட்டு, ‘எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே’ என்று நண்பர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

கொஞ்ச நேரம் போனதும், 
அது நான்தான் என்பது தெரிகிறது. 
நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. 
பலூனை எடுத்து ஊதி, ‘டப் டப்’ என்று உடைச்சாங்க.
அதேநேரத்தில் கமலஹாசனோட முகமும் திரையில் தெரியும். 


தியேட்டருக்கு வந்திருந்தவர்கள், ‘கமலஹாசன் ரசிகர்கள்தான் பலூனை வெடிக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொணடார்கள். பெங்களூரில்கூட கமலஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே’ என்று ஆச்சரியப்பட்டாங்க.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


‘அபூர்வராகங்கள்’ சிக்கலான கதை. விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் போடும் விடுகதையை அடிப்படையாக வைத்து, புதுபாணியில் இதை பாலசந்தர் எழுதியிருந்தார்.

படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அப்பா, கமலஹாசன் மகன். 
கமலஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்க, ஸ்ரீவித்யாவின் மகளான ஜெயசுதாவை மணக்க மேஜர் சுந்தர்ராஜன் முடிவு செய்வார்.


படம் கிளைமாக்கை நெருங்கும்போது, ‘நான் தான் பைரவியின் (ஸ்ரீவித்யா) புருஷன்’ என்று சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் திடீர் பிரவேசமாக நுழையும்போது, கதையில் பெரும் திருப்பம் ஏற்படும்.
இந்தக் கதையை மக்கள் ஏற்பார்களா? படம் ஓடுமா? என்று டைரக்டர் பாலசந்தர் உட்பட பலருக்கும் சந்தேகம் இருந்தது.

எனினும் படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ஓடியது.  


படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார். 

அவர் வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்ததால், டைரக்டர் பாலசந்தர், கதாநாயகன் கமலஹாசன், கதாநாயகி ஸ்ரீவித்யா உட்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.

ரஜினிகாந்துக்கும் மற்றவர்களுக்கும் ஏவி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார் தான் கேடயங்களை வழங்கினார்.

முதல்வரிடம் கேடயம் வாங்க முடியவில்லையே என்ற மனக்குறை ரஜினிக்கு நீண்டகாலம் இருந்தது. ‘முத்து’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தமிழக அரசின் பரிசை கலைஞரிடம் பெற்றபோது அந்த மனக்குறை தீர்ந்தது.