Tuesday 10 September 2019

ஷோபா நடிப்புக்கு முன் என் நடிப்பு ஒன்றுமே இல்லை-







பாட்டு, நடனம் இல்லாமல் 22 நாட்களில் உருவான விருதுகளை அள்ளிக் குவித்த ~பசி'



நடிகர் - நடிகைகளுக்கு ‘மேக்கப்’ போடாமல், பாட்டு, நடனம் இல்லாமல் டைரக்டர் துரை 22 நாட்களில் தயாரித்த ‘பசி’ படம் ஏராளமான விருதுகளைப் பெற்றதுடன், ஷோபாவுக்கு அகில இந்திய சிறந்த நடிகைக்கான ‘ஊர்வசி’ விருதைப் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து பல படங்களை இயக்கிக் கொண்டிருந்த டைரக்டர் துரைக்கு, அரசு விருதுகளைப் பெறக்கூடிய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘ஒரு வீடு ஒரு உலகம். இந்தப் படத்துக்கு நடிகை ஷோபா பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானித்தார். அதே சமயம், பிராமண குடும்பம் பற்றிய கதையாக இருந்ததால், அதற்கு ஷோபா பொருந்த வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

இதனால் திருக்காட்டுப்பள்ளியில் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கு முன்னதாகவே ஷோபாவை வரவழைத்து, அங்கிருந்த பிராமணப் பெண்களின் நடை, உடை, பாவனைகளை கவனிக்கச் செய்தார். இதன் விளைவாக படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, மனதளவில் பிராமணப் பெண்ணாகவே மாறிவிட்டார். ஷோபா.

இந்தப்பட அனுபவம் பற்றி துரை கூறியதாவது:-

படம் தயாராகி சென்சாருக்குப் போனபோது, அன்றைய சென்சார் உறுப்பினராக இருந்த ‘வீணை’ எஸ். பாலசந்தரின் முதல் பாராட்டு கிடைத்தது. படம் வந்தபோது ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது. தமிழ் மொழிப்படங்களில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த இயக்குனர் விருதும் எனக்கு கிடைத்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பே என் மனதில் உருவானது. ‘பசி’ கதை டைரஷ்னுக்கு என்னை அழைக்கும் தயாரிப்பாளர்களிடம்’பசி’ கதையை கூறுவேன். கேட்டு ரசிப்பார்களே தவிர, படமாக்க யாருமே முன்வரவில்லை. இதனால் நாமே இந்தப் படத்தை தயாரித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. கதை மீது அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததால், மேலும் நாட்களை கடத்தாமல் என் மகள் சுனிதா பெயரில் 
சுனிதா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினேன். கதாநாயகியாக ஷோபாவையும் மற்றும் விஜயன், டெல்லி கணேஷ் போன்றவர்களையும் ஒப்பந்தம் செய்தேன். சில கேரக்டர்களுக்கு புதுமுகங்களைத் தேடினேன்.

அப்போது எனக்கு கிடைத்த முத்துக்கள்தான் நடிகை பிரவீணா செந்தில், சத்யா, நாராயணன். (நடிகை பிரவீணா, பின்னாளில் டைரக்டர் கே. பாக்யராஜை மணந்தார்)

டைரக்டர் கே. பாலசந்தர் தலைமையில் ‘பசி’ படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றது. பூஜையன்றே தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரம் செய்திருந்த நான். இன்று முதல் பாரிஸ், பர்மா, சைனாவில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று கொட்டை எழுத்துக்களில் குறிப்பிட்டு இருந்தேன்.

கொஞ்சம் இடைவெளி விட்டு பாரீஸ் என்ற வார்த்தைக்கு அருகே ‘கார்னர்’ என்றும், பர்மா, சைனா வார்த்தைகளுக்கு அருகே ‘பஜார்’ என்றும்சின்ன எழுத்தில் போட்டிருந்தேன் படப்பிடிப்பு தொடங்கிய அன்றே, ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டு இருந்தேன்.

‘பசி’ படம் சென்னை பாரீஸ் கார்னரில் இருந்து மைலாப்பூர் வரை உள்ள சாலைகளிலும், குடிசைப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் சேரிப்பெண் கேரக்டரில் நடித்த ஷோபாவை அங்குள்ள குடிசைப் பகுதி பெண்களுடன் சந்திக்க வைத்து, பேசிப் பழக வைத்தேன். இதனால் ஷோபா, குடிசைப் பகுதி குப்பம்மாவாகவே மாறிப்போனார். கதையில் ரிக்க்ஷ¡ ஓட்டும் வேடத்தில் நடிக்கவிருந்த டெல்லி கணேஷ், ரிக்ஷ¡ ஒட்டிப்பழக ஒரு ரிக்ஷ¡வை சொந்தமாக வாங்கி அவரை ஓட்டிப்பழக வைத்தேன்.

தினமும் எடுக்கவிருக்கும் காட்சிகளுக்கு அலுவலகத்திலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம். ஒத்திகையில் திருப்தி ஏற்பட்டதும் நடிகர் - நடிகைகளை காரில் ஏற்றிச்சென்று, படப்பிடிப்பு நடக்கும் குடிசைப் பகுதியில் இறக்கி விட்டு விடுவோம். 
பிறகு அவர்களை ஏற்றி வந்த காரை சற்றுத்தள்ளி நிறுத்தி விடுவோம். நடிகர் - நடிகைகள் பேசி நடிக்கும் காட்சிகளை இன்னொரு காரில் இருந்த கேமரா மூலம் படமாக்கி விடுவோம். படப்பிடிப்பு நடப்பது 

யாருக்கும்தெரியாது காரணம் யாருக்கும் மேக்கப் கிடையாது. படத்தில் பாடலோ, நடனமோ இல்லை. இப்படி 22 நாட்களில் முழுப்படத்தையும் எடுத்து முடித்தேன். படம் தயாரானதே தவிர அதை வாங்க ஆளில்லை. படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும், குப்பைத்தொட்டியில் எடுத்த இந்தப்படம் ஓடாது என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

விநியோகஸ்தர்கள் தரப்பில் வரவேற்பு இல்லை என்று தெரிந்ததும், சினிமாவில் இருந்த எல்லா மொழி இயக்குனர்களையும், எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் அழைத்து படத்தை போட்டுக் காட்டினேன். படம் பார்க்க வந்த அனைவரும் என்னை பாராட்டிவிட்டுப்போக, தயாரிப்பாளர்அரங்கண்ணல் மட்டும்எதுவும் பேசாமல் புறப்பட்டுப் போனார்.

நான் அவரைப் பின்தொடர்ந்தபடி படம் உங்களுக்கு பிடிக்கவில்லையா சார்? என்று கேட்டேன் அவரோ என்னை ஒரு பார்வை பார்த்தபடி நாளை காலை தினத்தந்தயைப் பார் என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டார். மறுநாள் தினத்தந்தியை பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ‘பசி’ ஒரு குறிஞ்சி மலர் என்று இராம அரங்கண்ணல் விளம்பரம் செய்திருந்தார்.

‘பசி’ படத்தை சென்னை நகரில் நானே ரிலீஸ் செய்தேன். 2 ஏரியாக்களை பிரபல மலையாளப்பட டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் வாங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து மற்ற ஏரியாக்களையும் சிலர் வாங்கினார்கள். 
21-12-1979 அன்று ‘பசி’ ரிலீஸ் ஆயிற்று.

அன்று செய்த விளம்பரத்தில், கதையைப் பற்றி ஒரு கவிதையும் எழுதியிருந்தேன். கோதைக்கோ மானப்பசி குழந்தைக்கோ வயிற்றுப்பசி காதகனுக்கோ காமப்பசி காலத்திற்கோ மரணப்பசி என்ற அந்தக் கவிதைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

விநியோகஸ்தர்களால் இது ‘ஓடாது’ என்று மதிப்பிடப்பட்ட ‘பசி’ ஓகோ என்று ஓடியது. படத்தின் பல காட்சிகள் பெண்களின் இதயத்தைத் தொட்டு, கண்ரீவரச்செய்தது. மக்களின் ஆதரவைப் பெற்ற ‘பசி’ விருதுகளையும் குவித்தது. அகில இந்திய சிறந்த நடிகைக்கான ‘ஊர்வசி’ விருதை, ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான மத்திய அரசின் விருதையும்,தமிழக அரசின் விருதையும் ‘பசி’ பெற்றது. மாநில மொழிப்படத்தின் சிறந்த டைரக்டருக்கான விருது எனக்குக் கிடைத்தது.

டெல்லியில் நடந்த விழாவில் நானும், ஷோபாவும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றோம். அன்றைய ஜனாதிபதி சஞ்சீவரெட்டி அளித்த விருந்திலும் கலந்து கொண்டோம்.
இதுமட்டுமல்ல ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ‘பசி’ படம் திரையிடப்பட்டது.
இதற்காக ரஷ்யா சென்றிருந்தேன் என்னை மேடைக்கு அழைத்தபோது, நான் தமிழன் என்பதை வெளிப்படுத்த வேட்டி - சட்டையில் மேடையேறினேன். மேடையில் நான் பார்வையாளர்களை கை கூப்பி வணங்கி பிராட்டியா ஸ்தோத்தரியா என்றேன் நான் இப்படிச் சொன்னதும், அரங்கத்தில் கூடி இருந்தவர்கள் பலமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இதற்குக் காரணம் நான் கூறிய ரஷிய மொழிச் சொற்களுக்கு ‘சகோதர, சகோதரிகளே’ என்று அர்த்தம்! இதை நான், ரஷிய மொழியும், தமிழும் தெரிந்த நிகழ்ச்சி நிர்வாகியிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்து கொண்டு மேடையில் பேசினேன். இவ்வாறு துரை கூறினார். பசி படத்தின் மூலம் புகழ் பெற்ற சத்யா, பின்னர்’பசி’ சத்யா ஆனார். நாராயணன் ‘பசி’ நாராயணன் ஆனார். மகத்தான வெற்றி பெற்ற ‘பசி’யின் வெற்றி விழா சென்னையில் நடைபெற இருந்தது. 

அன்றைய தினம் ஷோபா மரணத்தைத் தழுவியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. விழாவை ரத்து செய்துவிட்டு. ஷோபாவுக்கு அஞ்சலி செலுத்தினார், துரை.
பின்னர் ‘பசி’ கதையை பேட் பியார் அவுர் பாப் என்ற பெயரில் இந்தியிலும் துரை தயாரித்தார். ‘பசி’ படம் பற்றி தெரிந்து வைத்திருந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்பாப்பரும், நடிகை சுமிதா பட்டேலும் இதில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தனர்.

அமிதாப்பச்சன், அம்ஜத்கான், மெஹமூத், தனுஜா, மவுஷ்மி சாட்டர்ஜி, அருணா இராணி என்று பல பிரபல நட்சத்திரங்களும்நடித்தார்கள். தமிழ் ‘பசி’யில் பாடல்கள் இல்லாதிருக்க, இந்தி ‘பசி’யிலோ பப்பிலஹரி இசையில் 5 பாடல்கள்.

மும்பை குடிசைப் பகுதியில் படமாக்கப்பட்ட இந்தி ‘பசி’யும், வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தில் சுமிதா பட்டேலின் நடிப்பை அனைவரும் புகழ்ந்தனர். பதிலுக்கு சுமிதா பட்டேல் என்ன சொன்னார் தெரியுமா?

இந்தப் படத்தில் என் நடிப்பை பாராட்டிய நீங்கள் யாருமே தமிழ் ‘பசி’ படம் பார்க்கவில்லை. அதில் ஷோபா நடிப்பை பார்க்க நேர்ந்திருந்தால், இப்போது என்னை பாராட்டிக் கொண்டிருக்க மாட்டீர்கள் ஷோபா நடிப்புக்கு முன் என் நடிப்பு ஒன்றுமே இல்லை என்றார் பெருந்தன்மையான நடிகை!

No comments:

Post a Comment