Thursday 25 August 2016

இயக்குனர்களின் போராட்டமே சினிமா -சிவாஜி ,எம்ஜியார் என்று - திருலோக சந்தர்



இயக்குனர்களின்  போராட்டமே சினிமா -சிவாஜி ,எம்ஜியார் என்று 
- திருலோக சந்தர் 










எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நானும் ஒரு பெண், 
எம்.ஜி.ஆருடன் அன்பே வா, 
ஜெமினி கணேசனுடன் ராமு,  
சிவாஜியுடன்எண்ணற்றவெற்றிச்சித்திரங்கள்
 என நேற்றைய கோடம்பாக்கத்தின் நான்கு தூண்களுடனும் கை கோர்த்து வாகை சூடிய ஒரே சாதனையாளர்!


கிருஷ்ணன்-பஞ்சு,
பி.ஆர்.பந்தலு, 
ஏ.பீம்சிங், 
கே.சங்கர், 
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் எவராலும் நெருங்க இயலாத இலக்கை முதலும் கடைசியுமாக அடைந்தவர்  திருலோகசந்தர் மாத்திரமே!

ஏவி.எம். தயாரிப்பான வீரத்திருமகன், திருலோக் இயக்கிய முதல் படம். 1962ல் வெளியானது. 









குமாரி என்கிற  அத்தனை அறியப்படாத எம்.ஜி.ஆர். படத்தில் டைரக்டர்  பத்மனாபன் என்பவரது உதவியாளராக திருலோகசந்தர் திரையுலகில்  காலடி எடுத்து வைத்தார். விஜயபுரி வீரன், பார்த்தால் பசி தீரும் ஆகியன அவரது கதைகள்.

ஆற்காட்டைச் சேர்ந்த வளமான குடும்பப் பிண்ணனியில் பிறந்தவர் திருலோகசந்தர். சுற்றத்தார் அனைவரும் திருலோக்  ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் திருலோகசந்தர் பால பருவம் தொடங்கி ஒரு புத்தகப்புழுவாக, தீராத வாசிப்பாளனாக உருவானவர்.


கமர்ஷியல் டைரக்டர் என்கிற முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும், திருலோக் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்.







1963ல்நிறவேற்றுமையின் பாதகம், மற்றும் 
பெண் கல்வியை வலியுறுத்தி ஏவி.எம். நிறுவனத்துக்கு ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் கிடைக்கக் காரணமாக நின்ற நானும் ஒரு பெண்…

மாற்றுத் திறனாளிகளை அனுதாபத்துக்குரியவர்களாகவே எப்போதும் காட்டும் பயாஸ்கோப். அவ்வாறு இல்லாமல் ஊனமுற்ற இளம் பெண்ணின் குற்றம் குறைகளையும் முதன் முதலில் யதார்த்தமாக வெளிப்படுத்திய 1965ன்  காக்கும் கரங்கள்...

 1966ல் குஷியான காதலை இனிமையான பாடல்களோடு வண்ணத்தில் இதமாக வார்த்துத் தந்த  அன்பே வா…









ஓர்  ஊமைச் சிறுவனின் சோகத்தை உரத்துக் கூறி, மீண்டும் மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை தமிழ் சினிமாவுக்குத் தட்டி வந்த ராமு,









முழு நீள திகில் மர்மப் படமாக வண்ணத்தில் அச்சுறுத்திய 1967ன் அதே கண்கள்…















ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப 
1969ல்  தேர்வான  முதல் படம் தெய்வமகன், 












வளர்ப்பு மகளுக்காகவே வாழ்ந்து மடிந்த 1971ன் தன்னலமற்ற ரிக்ஷாக்கார பாபு, 
பிரிவினை பிரசாரங்கள் மீண்டும் தலை தூக்கிய 
1973ல் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை 
வலியுறுத்திய பாரத விலாஸ்,  

தாம்பத்ய வாழ்வின் தெய்வீகத்தைத் தொடர்ந்து 
வெற்றிகரமாகப் பறை சாற்றிய 
1974ன் தீர்க்க சுமங்கலி, மற்றும் 

மகரிஷியின் கற்பனையை வெள்ளி விழா கொண்டாட 
வைத்த 1976ன்  பத்ரகாளி என திருலோகசந்தரது
 கடுமையான உழைப்பில் விளைந்த அத்தனை 
வெற்றிப்படங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து திருலோக்கைப் போல் வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிச் சித்திரங்களையும், ஆண்டு தவறாமல் நூறு நாள் படங்களையும் வழங்கிய  இயக்குநர் இன்று வரை வெகு சொற்பம்.

தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் என்.டி.ராமாராவ் நடித்த ராமு படம் மூலம் வெள்ளி விழா இயக்குநராக வலம் வந்தவர்.
அந்நாளில்  எம்.ஏ. பட்டத்துடன் தமிழ்த்திரையில் பங்காற்றிய ஒரே இயக்குநர்.


போதிய பள்ளிக் கல்வி அனுபவங்களின்றி நாடகம் மூலம் பட உலகுக்கு வந்த எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன்,  எம்.ஆர். ராதா, எஸ். வி. சுப்பையா போன்ற  ஜாம்பவான்களுக்கு மத்தியில் முதுகலைப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தன் கொடியை உயர்த்திப் பிடித்தது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்பது இன்றைய  கலையுலகினர் வரை எல்லாருக்கும் புரிந்த ஒன்று!

கமல் ஒருவர் தவிர அவரது காலத்தின் அத்தனை ஹீரோக்களும் ரஜினி உள்பட திருலோக்கினால் இயக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகைகளில் பானுமதி, வாணிஸ்ரீ  போன்ற சிலரை மாத்திரம் திருலோக் டைரக்ட் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

கலைஞர்கள் மட்டுமல்லாது ஏவி. மெய்யப்பன் போன்ற ஸ்டுடியோ முதலாளிகளையும் தன் நியாயமான வாதத் திறமைகளால் மனமொத்துப் பணியாற்றச் செய்த பெருமை மிக்கவர் திருலோக்.

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் திறமை மிக்க முன்னணி இயக்குநராக மிக நீண்ட காலம் ஜொலி ஜொலித்தவர் திருலோகசந்தர்.
பேசும் படம் சினிமா இதழ், தமிழ் சினிமா ரசிகர்கள் சங்கம் முதலிய அமைப்புகள் வருடம் தோறும்  வெளியிட்ட மிகச் சிறந்த கலைஞர்களுக்கான தேர்வுப் பட்டியலில் கண்டிப்பாக  திருலோகசந்தரின் இயக்கத்தில் நடித்தவர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பார்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை - எம்.ஜி.ஆர், திருவிளையாடல் - சிவாஜி இருவரில் ஒருவர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று, பேசும் படம் வாசகர்கள் நினைத்திருந்தனர். 
பேசும் படம் மாற்றி யோசித்தது. காக்கும் கரங்கள் படத்தில் மிக வித்தியாசமாக டாக்டர் வேடத்தில் அருமையாக நடித்தார் என்று  எஸ்.எஸ். ராஜேந்திரனை 1965ன் சிறந்த கலைஞராக அறிவித்தது.

காக்கும் கரங்கள் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டத் தரமான  படம்.

சிவாஜிக்கு இணையாக தீர்க்க சுமங்கலி படத்தில் முத்துராமனுக்கும் நடிப்பில் புகழ் தேடித் தந்தவர். தனது இயக்கத்தில் சிவகுமாரையும் பத்ரகாளி படத்தில் சிறப்பாகப் பயன் படுத்தி வெள்ளி விழா நாயகனாக்கி மிகப் பெரிய பிரேக் தந்தவர்.

நானும் ஒரு பெண் - விஜயகுமாரி, ராமு- இரு மலர்கள்- தீர்க்க சுமங்கலி படங்களில் கே. ஆர். விஜயா, எங்கிருந்தோ வந்தாள்- அவன் தான் மனிதன் போன்ற சினிமாக்களில் ஜெயலலிதா, பாபு- அவள் ஆகியவற்றில் வெண்ணிற ஆடை நிர்மலா  என்று பலருக்கும் தன் அசாத்திய உழைப்பால் சிறந்த நடிகை விருதும், மிகப் பெரிய திருப்புமுனையையும் தேடித் தந்தவர் திருலோகசந்தர்.  
        
நாயக நாயகிகள் மட்டுமல்லாது நாகேஷ், வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, மனோரமா உள்ளிட்ட நகைச்சுவை கலைஞர்களையும் முதன் முதலில் அழ வைத்து குணச்சித்திர வேடங்களில்  பரிமளிக்கச் செய்தவர். டாக்டர் சிவா படத்தில் மனோரமாவை வில்லியாகவும் நடிக்க வைத்திருக்கிறார்!

‘நானும் ஒரு பெண் படத்தில் நாகேஷின் சோக நடிப்பைப் பார்த்து விட்டு அவருக்காக சர்வர் சுந்தரம் கதையை எழுதினேன்’ என்று கே. பாலசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.
*
1996ல் சுதேசமித்திரன் நாளிதழின் வார பங்களிப்பான இளையமித்திரன் பத்திரிகைக்காகவும், 2005ல் ஜூன் 21ல் எனது ‘சிவாஜி’- நடிகர் முதல் திலகம் வரை  நூலுக்காகவும் இரு முறை திருலோகசந்தரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
23 வாரங்களைக் கடந்து ஓடிய அன்பே வா படத்தின் 100வது நாள் விழா. மேடையில் பேசிய எம்.ஜி.ஆர்.‘அன்பே வா வெற்றிக்கு முழு காரணம் ஏ.சி. திருலோகசந்தர். இது ஒரு டைரக்டரின் படம்’ என்றார் மனம் திறந்து.

மக்கள் திலகத்தை அதிகமாக  இயக்கிய ப. நீலகண்டனையோ, எம்.ஏ. திருமுகத்தையோ,கே. சங்கரையோ கூட அவர் அப்படிப் பாராட்டி இருக்கிறாரா என்பது தெரியாது.

திருலோகசந்தரையும் தனது காம்பவுண்டுக்குள் வற்புறுத்தி அழைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திருலோக் பராசக்தி காலத்திலிருந்து சிவாஜியின் பரம ரசிகனாக வளர்ந்தவர். கடைசி வரையில் கவனம் சிதறாமல் சிவாஜி யூனிட்டிலேயே தங்கி விட்டார்.

நடிகர் திலகத்தின் மிக அதிகமான படங்களை இயக்கும் வாய்ப்பு திருலோகசந்தருக்குக் கிடைத்தது.  அவற்றின் மொத்த எண்ணிக்கை இருபது. அதில் பெரும் பாலானவை வசூல் சித்திரங்கள். நடிப்பின் இமயமான சிவாஜியை இயக்குவது சிரமமான வேலையா என்று உங்களில் யாருக்காவது கேள்வி எழும்.

நிஜத்தில் வி.சி. கணேசன் எப்படிப்பட்டவர்? 
சிவாஜி காம்பினேஷனில் திருலோக் இயக்கிய படங்களை இன்றைய தலைமுறையினர் விரும்புவார்களா...?
 ஆகிய வினாக்களுக்கான விடைகள்...
மற்றும் நடிகர் திலகத்துடன் பணியாற்றும் போது 
நிகழ்ந்த சம்பவங்கள், 
சிவாஜிக்கும்  திருலோக்குமான பூரிப்பு, 
இதர வருத்தம் கலந்த தோழமையின் அத்தியாயங்கள் உங்களுக்காக:

‘தமிழ்நாட்டின் பெருமைகளில் எனது நண்பர் சிவாஜியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாரதி, தாகூர் மாதிரி நடிப்புக்கலைக்கு சிவாஜி!

சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி மாதிரி மெகா ஸ்டார்ஸ் நடிக்க  என்னோட கதை படமாகுது. பார்த்தால் பசி தீரும். முதல் நாள் பூஜையில நான் இல்லை.

ஒருநாள் கும்பலோட கும்பலா நின்னு அந்த சினிமா ஷூட்டிங்கைப் பார்த்தேன். அப்ப நான் ஏவி.எம்மோட வீரத்திருமகன் படத்தை இயக்கிக்கொண்டு இருந்தேன்.

சிவாஜிக்கு என்னை அறிமுகப்படுத்தற வாய்ப்பு ஆரம்பத்துல அமையல. இதுல யாரைக் குத்தம் சொல்றது?  இப்ப யோசிச்சா என்னோட தவறாவும் இருக்கலாம்னு தோணுது.

‘திருலோக்கை வெச்சி சினிமா எடுக்கிறதா இருந்தா உங்களுக்கு ஃபைனான்ஸ் பண்றேன்னு வேலாயுதம் நாயர் (கே.ஆர். விஜயாவின் கணவர்) சொன்னதா கே.பாலாஜி எங்கிட்ட தெரிவிச்சார். 

கே.பாலாஜி என்னோட பால்ய நண்பர்.ஏவி.எம். காம்பவுண்ட்ல அதுவரைக்கும் இருந்த நான், கே. பாலாஜிக்காக வெளியே வந்தேன்.

சிவாஜியை நான் இயக்கிய முதல் படம் கே. பாலாஜியின் தயாரிப்பான தங்கை. அது ஒரு பழைய இந்தி சினிமா. இதுல நான் நடிக்கணுமான்னு கேட்டார் சிவாஜி.

சிவாஜி கணேசனுக்கு அது செகண்ட் ரவுண்ட்னு கூட சொல்லலாம். குடும்பக்கதைகளைக் கடந்து ஏ.பி. நாகராஜனோட பக்தி சினிமாக்கள்ள பிஸியா இருந்த நேரம்.

தங்கை இந்திப் படத்தின் மூலக்கதையை மட்டும் வெச்சிக்கிட்டு புதுசா ஒரு திரைக்கதை எழுதினேன். சிவாஜி வீட்டுக்குக் கதை சொல்லப் போனோம். அன்னிக்கே நாங்க இணைஞ்சிட்டோம்.

நடிகர் திலகம் சிகரெட்டை ஒவ்வொண்ணா பத்த 
வெச்சிக்கிட்டே நான் கதை  சொல்றதை கேட்டுக்கிட்டு இருந்தார்.

‘நீங்க சிகரெட் பிடிக்கறதைப் பார்க்கப் பார்க்க எனக்கும்
 அதனோட தாக்கம் ஜாஸ்தியாயிட்டு வருது. 
நானும் சிகரெட் பிடிக்கணும் போலிருக்கு. 
தப்பா எடுத்துக்காதீங்க. 

இந்த வீட்ல உங்க முன்னால சிகரெட் பிடிக்கத் தயக்கமா இருக்கு. நீங்க அனுமதிச்சா நான் கொஞ்சம் வெளியிலே நின்னு புகைச்சிட்டு வரேன்னு’ சொன்னேன்.

ஸாரி... எனக்குத் தெரியாது திருலோக்.
நீங்களும் சிகரெட் பிடிப்பீங்கண்ணு. 
தெரிஞ்சிருந்தா நானே கொடுத்திருப்பேனே... 
நீங்க இங்கேயே என் எதிர்லயே சிகரெட் பிடிக்கலாம்.’னார் சிவாஜி.

நடிகர் திலகம் எதிரில் யாரும் சிகரெட் பிடிக்காத காலம். நான் கதை சொன்ன விதம் பிடிச்சிப் போய் என்னையே நடிச்சிக் காட்டணும்னு வற்புறுத்தினார்.

‘உனக்குப் புதுசு புதுசா ஏதாவது தோணலாம். நான் அதைக் கெட்டியா பிடிச்சிக்கலாம் இல்லையா’ன்னார்.
ரசிகர்கள் திரையில் அதுவரையில் பார்த்திராத மாறுபட்ட தோற்றத்துல, சிவாஜி கூடுதல் இளமையோட தங்கை படத்துல ஒரு ஆக்ஷன் ஹீரோவா முதன் முதலா ஜொலிச்சார்.

தங்கை, நடிகர் திலகத்தோட படங்கள்ல ஒரு ட்ரெண்ட் செட்டரா அமைஞ்சது. தங்கையோட வெற்றிகரமான ஓட்டத்தையும் வசூலையும் பார்த்துட்டு, தங்கச்சுரங்கம் சினிமால அவரை ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் நடிக்க வெச்சார் டைரக்டர் ராமண்ணா.

என் தம்பி, திருடன்னு தொடர்ந்து சக்ஸஸ் கொடுத்தோம். சிவாஜியோட சினிமாவுக்கு ’திருடன்’ங்கிற ற டைட்டிலான்னு எதிர்ப்பு கிளம்புச்சு.
கதைக்குப் பொருத்தமா இருந்ததால் அந்த பேர் வெச்சேன். நான் பண்றது கரெக்ட்டுன்னா பயம் வராது எனக்கு. 

எங்கிருந்தோ வந்தாள் படத்துக்குக் கூட ஆரம்பத்துல பைத்தியக்காரன்ற டைட்டிலை வெச்சோம். சிவாஜி  ஜாஸ்தி செண்டிமெண்ட் பார்க்கமாட்டார்.

நல்ல படமா அமைஞ்சும் எங்க மாமா மகத்தான வெற்றியை அடையல. காரணம் சிவாஜிங்கிற இமயத்துக்குரிய அழுத்தம், கதையிலயும் கேரக்டர்லயும் இன்னும் தேவைன்னு ரசிகர்கள் நினைச்சாங்க.

சிவாஜியை நான் சார்னும் அண்ணான்னும் கூப்பிடுவேன். அவர் என்னை  திருலோக்னுவார். எங்களுக்குள்ள பர்ஸ்ட் கிளாஸ் இண்டிமஸி இருந்தது.

தெய்வமகன்ல சிவாஜி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டார்.
ரொம்பவும் சிரமமான வேஷம். 
அதோடு கூட மூணு ரோல் வேறே. 
ஒவ்வொன்னிலும் ஒவ்வொரு மாதிரி மேக் அப்.
இருவரும் ஒரு சேலஞ்சா அதை எடுத்துக்கிட்டோம். 

தன்னோட சிறப்பான வசனங்களால ஓவர் ஸ்ட்ரெயின் கொடுப்பார் டயலாக் ரைட்டர் ஆரூர் தாஸ். நானும் சிவாஜியை கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கினேன்னும் சொல்லலாம்.

சிவாஜியோட ஒரு பக்க கன்னத்துல மட்டும் கோரமான மேக் அப் போடச் சொன்னேன். ரெண்டு சைடுலயும் அப்படி மேக் அப் பண்ணினா, அண்ணாவோட மறு பக்கக் கன்னம் எமோஷனல் சீன்ஸ்ல  அற்புதமா துடி துடிக்கிறதைக் காட்ட முடியாதேன்ற செல்ஃபிஷ்னெஸ்...  சிவாஜி ரசிகனா  என்னோட பேராசைன்னும் எடுத்துக்கலாம்.

இப்ப மாதிரி டெக்னிகல் வேல்யூஸ் எதுவுமே இல்லாத காலம். முகத்தோட பயங்கரம் வெளிப்பட, செலுலாயிடு, முட்டை ரெண்டையும் உருக்கி அந்த பேஸ்டை கன்னத்துல பூசிக்கிட்டார் சிவாஜி.

சீன் எடுத்து முடிஞ்சதும் அந்த எக் பேஸ்டை சுடு தண்ணில கழுவி, கொஞ்ச நேரம் ஆன பின்னாலதான்  சின்ன சிவாஜி ரெடியாக முடியும்.
இல்லன்னா முகத்துல ஏற்கனவே கவ்விக்கிட்டிருந்த முட்டைப்பத்தோட நாத்தமும் போகாது. ஒரு சைடு முகம் சுருக்கமாவே காமிரால தெரியும்.

சிவாஜிக்கு தெய்வமகன் படம் மட்டும் தானா? ஒரே நாள்ள மூணு நாலு படம் கூட ஆக்ட் பண்ணுவார். எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிட்டு தெய்வமகன்ல கூடுதலா அக்கறை காட்டி நடிச்சார்.

படத்துல ரொம்ப முக்கியமானது மூணு சிவாஜியும் ஒரே நேரத்துல ஒண்ணா ஸ்கிரீன்ல தெரியற சீன்.
அந்தக் கட்டத்துக்காக கண்ணனாக வரும் பாதிக்கப்பட்ட சிவாஜி, தன் அப்பா சிவாஜியிடம் நியாயம் கேட்கிற மாதிரி ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதினார் ஆரூர்தாஸ்.
அத்தனையும் அமிர்தம்னு சொல்லலாம்.

‘குட்டி அழகா இல்லேங்கிறதால மான் அதை விட்டுட்டுப் போனதாகவோ, மலர் அழகா இல்லேங்குறதுக்காக கொடி அதை உதிர்த்து விட்டதாகவோ நான் கதைகள்ள கூட படிச்சதில்லயே’ன்னு

ரெண்டுசிவாஜியும்மாறிமாறி ஏக் தம்ல  நிறைய பேச வேண்டியிருந்துச்சு.
அண்ணா ரொம்பவே டென்ஷனாயிட்டார்.

‘ஏன் என்னை ஸ்ட்ரைன் பண்ண வைக்கிறீங்கன்னு...’ 
கோபமா கேட்டார்.

காட்சியோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னதும் ஒரே டேக்ல அவ்வளவு வசனத்தையும் பேசி வழக்கம் போல் கைத்தட்டல் வாங்கினார்.

முதன் முதலா சிவாஜிக்கு நிகரா மேஜருக்கும் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுத்தேன். நான் அடிச்சிக் காமிக்கிறேன் பாருன்னார் சிவாஜி. ரெண்டு பேரும் மீட் பண்ற காட்சிகள்ல பலத்த நடிப்புப் போட்டி இருந்துச்சு.

தெய்வமகன் வங்காள மூலக்கதையை அடிப்படையாக் கொண்ட படம். தமிழ் தவிர மத்த இந்தி, கன்னட மொழிகள்ல எடுத்தபோது தெய்வமகன் தோல்வி அடைஞ்சது.

தமிழில் மட்டும் பிரமாதமான வெற்றி அடைய ஒரே காரணம் சிவாஜி!
சிவாஜியும்  சில சமயம் சோதிப்பார். 

சீண்டிப் பார்த்தா எப்படி இருக்காங்கன்னு பார்க்கறேன்னுவார். 
வெளியில கெட்டவன் வேஷம் போடுவார்.
ஆரம்பத்துல பழகும் போது கடுமை இருக்கும். 
அது ஒரு போர்வை.

சிவாஜி ஒரு பலாப்பழம். தொடக்கத்துல முள் இறுகின தோல். அடுத்து அதுக்குள்ள வழுக்குறத் தன்மையுள்ள பலாச்சுளை இருக்கும். சிவாஜியும் அதே மாதிரி மனுஷர். பழகப் பழகத்தான் இனிப்பாரு. படாத பாடு பட்டு சினிமால முன்னுக்கு வந்ததால எப்பவும் எச்சரிக்கையா இருப்பார்.

எங்கிருந்தோ வந்தாள் படத்துல ஆரம்பத்துல சிவாஜியோட பத்மினி நடிச்சாங்க. அவங்க அமெரிக்கா போக வேண்டி இருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியல.

இவங்களதான் தனக்கு ஹீரோயினா நடிக்க வைக்கணும்னு சிவாஜி சொல்லவே மாட்டார். என் மேலே ரொம்ப நம்பிக்கை உண்டு அவருக்கு.
பத்மினி இடத்துல அப்பறம் யார் கதாநாயகின்னு குழப்பம் வந்தது. அப்ப டான்ஸ்ல புகழ் பெற்ற ஒரே  இளம் ஹீரோயின் ஜெயலலிதா. ரொம்பவும் பிசியா இருந்த ஜெயலலிதாவோட கால்ஷீட்டை கஷ்டப்பட்டு கே. பாலாஜி வாங்கினார்.

க்ளைமாக்ஸ் முழுக்க முழுக்க ஜெயலலிதாவோட பெர்பாமன்ஸை நம்பி  திரைக்கதை எழுதினேன். சிவாஜியும் அதை என்கரேஜ் பண்ணார். ரொம்ப அற்புதமா நடிச்சாங்க ஜெயலலிதா. எப்பவும் எனக்குப் பேர் சொல்ற படமா எங்கிருந்தோ வந்தாள் அமைஞ்சது.

சிவாஜி காம்பினேஷன்ல நான் வொர்க் பண்ணிய படங்கள்ள எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் பாபு. அதில் சிவாஜி நடிப்பும் பாத்திரப்படைப்பும் எப்பவும்  பிடிக்கும்.

பாபு சப்ஜெக்ட்  முடிவானதுமே என்னோட சினி பாரத்  பேனர்ல முதல் படமா அதை எடுக்கத் தீர்மானிச்சேன். கதையைக் கேட்டவங்க அழுகைப் படம், ஓடுமான்னு பயமுறுத்தினாங்க.

பாபுவா சிவாஜியைத் தவிர வேற யாரையும் நான் சிந்திக்கவே இல்ல. பாபுவா நடிக்கப் பலர் கிடைக்கலாம். பாபுவா வாழ்ந்து காட்ட நடிகர் திலகம் ஒருத்தரால் மட்டுமே முடியும்னு மனசார நம்பினேன். என் கணிப்பு சரின்னு ஆனந்த விகடன் விமரிசனம் சொல்லுச்சு.

முதல் பாரால ‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்னு சொல்றது கூட சிவாஜியோட அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டா இருக்க முடியாது. அப்படியோர் அருமையான நடிப்பு!’ ன்னு முதல் பாராலயே ஆச்சரியக்குறி போட்டுச்சு. கடைசி வரியில, பாபுல சிவாஜியின் நடிப்பு தங்க விளக்குன்னு குறிப்பிட்டுச்சு.

நான் அழுது கொண்டே சிரித்தேன். சிவாஜியின் நடிப்பு என்னை அழ வைத்தது. படத்தின் வெற்றி என்னைச் சிரிக்க வைத்தது.

மிகப் பெரிய மாஸ் ஹீரோவான சிவாஜிக்கு அதுல ஜோடியே கிடையாது. டான்ஸ், டூயட் எதுவும் இல்ல. நாயகிக்குப் பதிலா சவுகார் ஜானகிக்கு முக்கிய வேஷம் கொடுத்தேன்.

என் படங்கள்ள சவுகார் அதிகம் நடிச்சதில்ல. பாபுல மட்டும்தான் ஆக்ட் பண்ணாங்கன்னு நினைக்கிறேன்.

‘வழக்கமான விதவை ரோல்னு நான் உங்களை  தப்பா எடை போட்டுட்டேன். எப்பேர்ப்பட்ட கேரக்டர் எனக்குக் கொடுத்திருக்கீங்க’ன்னு பாபு படம் பார்த்துட்டு சவுகார் என்னைப் பாராட்டி பேசினாங்க.

ஜெமினி எஸ்.எஸ். வாசன் சார் கிட்டே ஒரு கதையை அன்பே வா சமயத்துல சொன்னேன்.
‘இந்த நேரத்துக்கு மிக மிக அவசியமான கதை. பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறீர்கள். இதைப் படமாக்க நான் உதவுகிறேன். வழக்கம் போல் மெகா ஸ்டார்களைப் போட்டு விடாதீர்கள். சிறிய கலைஞர்களைப் போட்டு எடுங்கள்’ என்றார். 

சில ஆண்டுகளில் அவர் அமரர் ஆகி விட்டார். நான் வாசன் அவர்களிடம் சொன்ன சப்ஜெக்ட், பாரத விலாஸ்.
பாபு தந்த உற்சாகத்தில் உடனே அதைப் படமாக்கினேன். அருமையான கேரக்டர்களில் பெரிய நடிகர்களையும்,  வாரிசுகளாக இளம் நடிகர்கள் சிவகுமார், சசிகுமார், ஜெயசித்ரா, ஜெய்சுதா ஆகியோரைப் பயன்படுத்திக்கொண்டேன்.

தேசிய ஒருமைப்பாட்டை முதன் முதலில் கலரில் சொல்லும் படமாக பாரத விலாஸ் அமைந்தது. அதைப்  பாமர மக்களுக்கும் உணர்த்தற மாதிரி சஞ்சீவ் குமார், ஏ. நாகேஸ்வர ராவ், மது என மற்ற மொழி ஸ்டார்ஸையும் கெளரவ வேடத்தில் நடிக்கவைத்தேன்.

வாணிஸ்ரீயும் அப்ப சிவாஜிக்கு ஈடு கொடுத்து பிரமாதமா நடிச்சுட்டு வந்தாங்க. அவங்க ரெண்டு பேரையும் வெச்சு பம்பாய் பாபுன்னு ஒரு படம் ஆரம்பிச்சோம். நின்னு போச்சு. வாணிஸ்ரீயை டைரக்ட் பண்ற வாய்ப்பு இல்லாம போயிடுச்சு.

சிவாஜி-ஜெயலலிதா  காம்பினேஷன்ல நான் வேலை செஞ்ச கடைசி படம் அவன் தான் மனிதன். சிவாஜியோட 175வது சினிமாவா வந்தது. இருபது வாரம் போச்சு. சிவாஜி அண்ணா திருப்தியா நடிச்ச படம். அதுல அருமையான ரோல் அவருக்கு.

‘அந்த ஏழு ஜென்மங்கள்’னு சிவாஜிக்காக ஒரு கதை தயார் பண்ணோம். ஒவ்வொரு ஜென்மத்துலயும் சிவாஜி என்னவா இருந்தார்னு டீரிட்மென்ட் எழுதினோம். சிவாஜி ரொம்ப பிசியா இருந்ததால படமாக்க முடியல.
நான் சிவாஜி அண்ணாவோட அதிகப் படங்களை இயக்கி இருக்கேன்கிற பெருமை கிடைச்சிருக்கு. நீங்க நம்ப முடியாத ஒரு விஷயத்தை இப்பச் சொல்றேன். அவை எதுக்குமே அவர் எனக்காக சிபாரிசு பண்ணதே இல்ல. இன்னமும் நம்ப முடியலியா?

சிவாஜி புரொடக்ஷன்ஸ் எத்தனையோ படங்களை இதுவரைக்கும் சக்ஸஸ்புஃல்லா எடுத்துருக்காங்க. அவங்க கம்பெனி தயாரிச்ச எந்த சினிமாவையும் நான் இயக்கியதில்லை. போதுமா!

எனக்கும் சிவாஜிக்குமான நட்பு எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது.
சிவாஜின்னா  ஓவர் ஆக்டிங். இன்னிக்கு உள்ள ஆடியன்ஸ் அண்ணனை விரும்ப மாட்டாங்கன்னு தப்பான அபிப்ராயம் இருக்கு.

அவரும் நானும் கொடுத்த படங்கள் இப்பவும் பார்க்கறதுக்குப் புதுசாவும் சிறப்பாவும் இருக்கு. அப்படியில்லன்னா பிரைவேட் சேனல்கள்ல தெய்வ மகனையே ரிபீட் பண்ணுவாங்களா...?

சினிமா என்பது  அசாதாரணமான ஒண்ணு. ரெண்டரை மணி நேரம் ஓடற படத்துல நம்மை பாதிக்கிற விஷயம் ஏதாச்சும் இருந்தா மட்டுமே ஜனங்க மூவி பார்ப்பாங்க. படமும் நூறு நாள் ஓடும்.

பைலட் பிரேம்நாத், இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு. தமிழ்நாட்டை விடவும் சிலோன்ல வருஷக்கணக்குல தொடர்ந்து ஓடினதா ரசிகர்களோட புள்ளி விவரம் சொல்லுது.

‘மெழுகு  பொம்மைகள்’ என்கிற பேர்ல சச்சுவும்- ஏ.ஆர். எஸ்ஸூம் நடிச்சு ஓஹோன்னு நடந்த டிராமாவோட மூலக் கற்பனை பைலட் பிரேம்நாத்.     
அதுல சிவாஜியும் ஸ்ரீதேவியும் அப்பா - மகளா நடிச்சாங்க. தன் குழந்தைகள்ல ஏதோ ஒண்ணு மட்டும் தனக்குப் பொறந்தது இல்லன்னு சிவாஜிக்குத் தெரிய வரும்போது ஏற்படற விளைவுதான் திரைக்கதை.

‘ஊட்டமான கதையை டிராமாட்டிக்காகச் செய்வதில் திருலோகசந்தர் எக்ஸ்பர்ட். சுவையான முடிவு. எப்போதோ ஒரு முறை மட்டுமே சந்திக்க முடிகிற சாதனை!’

அப்படின்னு குமுதம் பைலட் பிரேம்நாத் விமரிசனத்துல என்னைப் பாராட்டி எழுதுச்சு. முதன் முதலா 1978 தீபாவளிக்கு ஒரு டஜனுக்கும் மேலான படங்கள் ரிலீஸ் ஆச்சு. பலத்த போட்டிக்கு நடுவுல நானும் சிவாஜியும் எப்பவும் போல ஜெயிச்சுக் காட்டினோம்.

இரு மலர்கள், எங்கிருந்தோ வந்தாள், பாபு, விஸ்வ ரூபம்னு நானும் சிவாஜியும் சேர்ந்து பண்ணது தீபாவளி ரேசுல நூறு நாள் ஓடியிருக்கு.
சிவாஜியை நான் கடைசியா டைரக்ட் பண்ண படம், அன்புள்ள அப்பா. 1987 மே-ல வந்தது. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான இயல்பான பாசத்தை அதுல காட்டினோம்.  நதியா அப்ப ரொம்ப பாப்புலர். அவங்க பேர்ல அன்னிக்கு விக்காத  பொருளே கிடையாது.சிவாஜி மகளா நதியா நல்லா நடிச்சுது.

கறந்த பால் மாதிரி கற்பனையே கலக்காம எனக்கும் என்னோட ஒரே பொண்ணுக்குமான அன்றாட அன்னியோன்யமே அன்புள்ள அப்பா. தினமும் என் வீட்ல நடந்த கதை. ஏவி.எம்.தயாரிச்சும் ஓஹோன்னு போகல. யதார்த்தத்துல நடக்கறது ஸ்கிரீன்ல ஓடாது. இயல்பை மீறிய ஒரு விஷயத்தைத்தான் ஜனங்க எதிர்பார்க்கிறாங்க.

திருலோக் படங்கள்ள பெரும்பாலானவை ரீமேக்குன்னு சொல்றாங்க. ரீமேக் தப்புன்னு யார் சொன்னது? இன்னிக்கு வரை தமிழகக் காப்பியங்கள், இலக்கியங்கள்ள  இரவல் இல்லையா?

இங்கிலீஷ் லிட்டரேச்சரோட  பாதிப்பு நம்ம ஊரு ரைட்டர்ஸ் கிட்டே அடியோட கிடையாதா? 
என்னைச் சிறிது கூட உறுத்தாத எந்த ரீமேக் சப்ஜெக்ட்களையும் நான் டைரக்ட் பண்ண ஒத்துக்க மாட்டேன். நான் அக்செப்ட் பண்ண ஃபிலிம்களை விடவும் வேணாம்னு தள்ளினது ஜாஸ்தி.’ - ஏ.சி. திருலோகசந்தர்.

திருலோகசந்தர் காலத்தில் சினிமா செட்டுக்குக் கொண்டு வந்து  நூல்களைத் தொடர்ந்து வாசித்து, திருலோக்குடன் படித்த புத்தகங்கள் குறித்து விவாதித்து, ஒத்த ரசனையோடு வலம் வந்த  நட்சத்திரத்தின் பெயர் ஜெயலலிதா!

டைரக்டர்களில் திருலோக், நடிகைகளில் ஜெயலலிதா போல் உலகின் எண்ணற்றத் தலை சிறந்த நூல்களை வாசித்த சினிமாகாரர்கள் அப்போது எவரும் கிடையாது.

1969 -தெய்வமகன், 1970 -எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள் 1972 - தர்மம் எங்கே? 1975- அவன் தான் மனிதன் என சிவாஜி- திருலோக் கூட்டணியில் அதிக பட்சமாக  ஐந்து படங்களில் பங்கேற்ற ஒரே ஹீரோயின் ஜெயலலிதா!

விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன், ஆர். சுதர்சனம் வேதா, சங்கர் கணேஷ், இளையராஜா எனத் தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொரு இசை அமைப்பாளரிடமிருந்தும் இனிய சூப்பர் ஹிட் பாடல்களைக் கேட்டு வாங்கும் வல்லமை  திருலோகசந்தருக்கு உரியது.

கவிஞர் வாலியின் பேனா முனையைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வந்தவர் ஏ. சி. திருலோகசந்தர். எம்.ஜி.ஆரால் அவ்வப்போது கை விடப்பட்டு,  வாலி சரிகிற போதெல்லாம் திரைப்பாட்டில் அவரைச் சரித்திரம் படைக்க வைத்தவர் திருலோகசந்தர்.

திருலோக் - வாலி வெற்றிக் கூட்டணியில் ஞாயிறு என்பது கண்ணாக, இதோ எந்தன் தெய்வம், மல்லிகை என் மன்னன் மயங்கும், மலரே குறிஞ்சி மலரே, கண்ணன் என் கைக்குழந்தை தவிர அன்பே வா, இரு மலர்கள், உள்ளிட்ட ஏராளமான படங்களில் வாலியின் முழுமையான பங்களிப்பு அவர்களது நேசத்தைச் சொல்லும்.

கலையுலக மார்க்கண்டேயர் என அழைக்கப்படுகிற சிவகுமார், காக்கும் கரங்கள் படம் மூலம் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் உருவானவர். திருடன் சினிமா மூலம் சசிகுமாரை அறிமுகப்படுத்தினார் திருலோக். அவள் வெற்றிச்சித்திரத்தில் அவரை ஹீரோவாகவும் ஆக்கினார்.


நானும் ஒரு பெண்- ஏவி.எம். ராஜன் நாயகனாக வலம் வரவும்,  அவள் படம் ஸ்ரீகாந்த்தை வில்லன் நடிகராக வெற்றி பெறச் செய்யவும் திருலோக்கின் உழைப்பு உதவியது.





டாக்டர் சிவா படத்தில் முதன் முதலாக திருலோக், 
தங்கை வேடத்தில் தோன்றச் செய்த ஜெயமாலினி 
பின்னாளில் கவர்ச்சியில் ஜொலித்து ‘ஜெகன் மோகினி’ ஆனார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ள ஒரே தமிழ்ப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம். திருலோக்கின் வெற்றிப் படைப்பான ‘தீர்க்க சுமங்கலி’-யில் மல்லிகையாக மணம் பரப்பி  உதயமானவர்.

No comments:

Post a Comment